ஸ்பானிஷ் சமோசா 'எம்பனாடா'வைப் பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? புத்தம் புது காலை #6AMClub

1 week ago 2

மனிதர்கள் உலகை சுற்றிவருவதைப்போல, ருசியான உணவுப் பொருட்களும் உலகம் வலம்வருகின்றன.

நம்மூரில் நாம் கொழுக்கட்டை பூரணம் செய்வதுபோல், சமைத்த சிக்கன் ரோஸ்ட் அல்லது மட்டன் பால்களைக் கொண்டு சுவைமிக்க எம்பனாடாவை சமைக்கின்றனர் ஸ்பானிஷ் மக்கள். எம்பனாடா என்றால் என்ன, இதைப்பற்றி நாம் ஏன் இன்று தெரிந்துகொள்ள வேண்டும்?

ஸ்பெயின் நாட்டின் கலீசிய மொழியில் "எம்பனர்" என்றால், ரொட்டியால் சுருட்டிய உணவு என்று பொருள். இந்த எம்பனாடாவை செய்யும் முறை மிகவும் எளிது. முதலில் கோதுமை அல்லது மைதா மாவை சிறிதளவு நீர் சேர்த்து, நன்கு பிசைந்து, ஒரு பாத்திரத்தில் மூடி வைக்க வேண்டும்.

எம்பனாடா

பிறகு, சைவப் பிரியர்களுக்கு நன்கு நறுக்கி வதக்கிய உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், ஆலிவ், மிளகு, சீஸ் சேர்த்த பூரணமோ அல்லது அசைவ உணவுப் பிரியர்களுக்கு, நன்கு நறுக்கி வதக்கிய சிக்கன், பீஃப் அல்லது மட்டன் பீஸ்களுடன் அதே தக்காளி, வெங்காயம், கார்ன், சீஸ் ஆகியன சேர்த்த பூரணமோ செய்து எடுத்துக் கொள்ளவேண்டும். இதனுடன் ஏற்கெனவே பிசைந்த கோதுமை மாவை வட்டமாகத் தேய்த்து, அதன் நடுவே சைவ அல்லது அசைவ பூரணத்தை வைத்து, எண்ணெயில் பொரித்தாலோ, அல்லது ஓவனில் வேக வைத்தாலோ சுவைமிக்க எம்பனாடா ரெடி என்கிறது ஸ்பானிஷ் பார்சிலோனிய ரெசிப்பி புத்தகம்.

"அட... இந்த எம்பனாடா என்பது நமது சமோசா போலிருக்கிறதே" என்பவர்களுக்கு, "நாம்" (ஆம்) என்கின்றனர் அரேபியர்கள்.

உண்மையில் நமது சிற்றுண்டிகளில் முக்கிய இடம் வகிக்கும் சுவைமிக்க பொன்னிற முக்கோண வடிவ சமோசாக்களின் பிறப்பிடம் இந்தியா அல்ல, அரபு நாடு என்கிறது வரலாறு.

பத்தாம் நூற்றாண்டில், பெர்சியாவின் 'சன்போசா', கிழக்கே இந்தியாவிற்கும் மற்ற ஆசிய நாடுகளுக்கும் சமோசாவாகப் பயணித்த கதையும் சுவைமிக்கது.

எம்பனாடா

காலையில் மீதியான இட்லியை இட்லி உப்புமாவாகவும், இரவில் மீதியான அரிசி சோற்றை புளிச்சாதமாகவும் நாம் சமைத்து உண்பதுபோலவே, தங்களது இரவுப் பயணங்களில் சுல்தானின் உதவியாளர்கள், இரவு உணவில் மிகுதியான இறைச்சியை ரொட்டி மாவில் வைத்து, முக்கோண வடிவில் தங்களது கேம்ப் ஃபயரிலேயே சுட்டு, அவற்றை சிறிய மூட்டைகளில் (saddlebags) பத்திரப்படுத்தி அடுத்த நாள் பயணத்தின்போது உட்கொள்வார்களாம்..

அப்படி நுழைந்த சன்போசா உப்பு, காரம், மசாலா சேர்த்த தேசி சமோசாவாக உருமாறி நமது தெருவோரக் கேன்டீன் முதல், விமானநிலைய விற்பனையகங்கள் வரை, அனைவருக்கும் பிடித்தமான உணவாக இன்று மாறியிருக்கிறது.

இதுபோலவே, ஏழாம் நூற்றாண்டில் ஐபீரியத் தீபகற்பத்திலிருந்து, முஸ்லிம் படையினருடன் மேற்கே போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றதுதான் இந்த எம்பனாடாஸ்.

அதைத்தொடர்ந்து ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்திய லத்தீன் அமெரிக்கா, ஆர்ஜென்டீனா, பெரூ, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், இந்தோனீசிய நாடுகள் மட்டுமன்றி, உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணித்திருக்கிறது இந்த எம்பனாடாஸ். இன்று உலகின் எல்லா மூலைகளிலும் பிரபலமாகாக விளங்குவதுடன், அந்தந்த இடத்திற்கு ஏற்ப, ஆப்பிள் பை, சாக்லெட், பீட்சா ஆகிய பூரணங்களுடன் வலம் வருகிறது, நம் எளிமை மிக்க சமோசாவாகிய எம்பனாடா!

எம்பனாடா

ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 8-ம் தேதியை 'உலக எம்பனாடா தினம்' என்று ஸ்பெயின் நாட்டவர்கள் கொண்டாடுகையில் உலகம் முழுக்கவும் அதை உண்ணுவதைப் பார்க்கும்போதே, 'உணவு உலகமயமாக்கல்' என்ற வரலாற்றையும் புரிய வைக்கிறது இந்த எம்பனாடாவாகிய சமோசா!

Read Entire Article