வருகைக்கு முன்பு பளீச் சுத்தம், சென்றபிறகுக் குப்பைக்காடு - முதல்வரின் கோவை பரப்புரைக் களநிலவரம்

1 month ago 2

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் தேர்தல் பரப்புரைக்காக நேற்று முன்தினம் இரவு கோவை வந்தார். தொடர்ந்து, அவர் கோவை மாவட்டம் முழுவதும் பரப்பரையில் ஈடுபட்டு வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு, அ.தி.மு.க-வினர் தடபுடல் வரவேற்பு கொடுத்து வருகின்றனர், கோவை முழுவதும் கட்அவுட், பேனர்கள் குவிக்கப்பட்டுள்ளன. குண்டும், குழியுமான சாலைகள் சரிசெய்யப்பட்டுள்ளன.

எடப்பாடி கட்அவுட்

Also Read: `தன்னைப் பார்த்து மக்கள் சிரிப்பதைக் கூட அவர் உணர்வதில்லை!' - ஸ்டாலினைக் கலாய்த்த எடப்பாடி

அவர் செல்லும் வழியெங்கும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கின்றனர். இதனால், பல சாலைகள் பளீச் சுத்தத்தில் காட்சியளித்தன. ஆனால், அவையெல்லாம் முதல்வர் வருவதற்கு முன்புதான். அவர் வந்துவிட்டு சென்றவுடன் அந்த இடம் அப்படியே தலைகீழ் ஆகிவிடுகிறது.

எடப்பாடி பழனிசாமி இன்று காலை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புலியகுளம் விநாயகர் கோயிலில் சென்று அங்கு தரிசனம் செய்தார். பிறகு, ராமநாதபுரம் வழியாக சிங்காநல்லூர் பகுதிக்கு வந்தார். அங்கு, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, ஜாமப் இசை என்று எடப்பாடிக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், பெண்கள் மூலம் பூர்வ கும்ப மரியாதையும் வழங்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி

இதற்காக, அழைத்து வரப்பட்ட பெண்கள் அனைவருக்கும் ஒரே நிறத்தில் புடவைகளும் கொடுக்கப்பட்டிருந்தன. சரியாக, எடப்பாடி என்ட்ரி கொடுக்கும்போது, `வெற்றிநடை போடும் தமிழகம் பாடல்..’ ஒலிபரப்பப்படுகிறது. தொடர்ந்து பரப்பரையில் ஈடுபடுவதால் எடப்பாடிக்கு தொண்டை கட்டியுள்ளது.

இதனால் பேசத்தொடங்கும்போதே அவர், `தொண்டை சரியில்லை’ என்று கூறிவிட்டுதான் பேசுகிறார். ``தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேலைக் கையில் எடுத்துவிட்டார். நாம் மனதார பிரார்த்தனை செய்கிறோம். உண்மையாக இருக்கிறோம். ஆனால், ஸ்டாலின் உள் ஒன்று வைத்து, வெளியே ஒன்று பேசுவார். தி.மு.க பகல் வேஷம் போடுகிறது” என்று ஸ்டாலினையும், தி.மு.க-வையும் விமர்சித்துவிட்டு, அ.தி.மு.க அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வாக்கு சேகரிக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

சிங்காநல்லூர் பகுதிக்கு அடுத்தபடியாக, எடப்பாடி பழனிசாமி பீளமேடு அருகே உள்ள ரொட்டிகடை மைதானத்தில் பரப்புரையில் ஈடுபட்டார். அங்கும், மயிலாட்டம், ஒயிலாட்டம், ஜமாப், சண்ட மேளம் மூலம் அவருக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்தப் பகுதி மிகவும் குறுகியதாக இருந்தாலும் ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தன. ஜெயலலிதாவுக்கு செய்வதைப் போல, ஆரஞ்ச் மற்றும் சாத்துக்குடி பழங்களில் அலங்கார பந்தல் அமைக்கப்பட்டிருந்து. சிறிது தூரத்துக்கு சாலையின் இரண்டு புறங்களிலும் கரும்புகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன.

எடப்பாடி பழனிசாமி பரப்புரை

இதுதவிர வாழைமரம், தோரணம், பூக்கள் என்று அந்தப் பகுதியே விழாக் கோலம் பூண்டிருந்தது. சாலைகளும் சுத்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி பேசிவிட்டு சென்ற சில நிமிடங்களில் அந்தப் பகுதி அப்படியே தலைகீழாகிவிட்டது. வரிசையாக அடுக்கப்பட்டிருந்த கரும்புகளை எடுக்க மக்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.

Also Read: `தன்னைப் பார்த்து மக்கள் சிரிப்பதைக் கூட அவர் உணர்வதில்லை!' - ஸ்டாலினைக் கலாய்த்த எடப்பாடி

சிலர் விழுந்து அடித்து கரும்புகளை எடுத்து சென்றனர். இதனால், எடப்பாடி சென்று நீண்ட நேரமாகியும் அந்த இடத்தில் போக்குவரத்து நெருக்கடி குறையவில்லை. போலீஸ் வாகனங்களே ஸ்தம்பித்து நின்றுவிட்டன. ``எப்பா.. கொஞ்சம் வழிவிடுங்க” என்று போலீஸார் கெஞ்ச, கூட்டத்தில் ஒருவர் டென்ஷனாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்த போலீஸ்காரருக்கு ஒரு கரும்பைக் கொடுத்து கூல் செய்தார்.

கரும்பு

அந்த போலீஸாரும் சிரித்துக் கொண்டே கரும்பை வாங்கிக் கொண்டார். வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட மக்கள், அவர்கள் வந்த பேருந்து கிளம்பும்வரை கரும்புகளை அள்ளிக் கொண்டிருந்தனர். ஒருக்கட்டத்தில் அவர்கள் வந்த வாகனங்கள் புறப்படவே, ``மாப்ள.. பஸ் கிளம்புதாம் வா போகலாம்..” என்று அரை மனதுடன் கிளம்பினர்.

அதேபோல, சாத்துக்குடி, ஆரஞ்சு பந்தலும் குறிவைக்கப்பட்டது. கூட்டத்தில் சிலர் அந்தப் பந்தல் மீது ஏறி நின்று பழங்களை எடுத்துக் கீழே போட்டனர். அவர்களுக்கு வேண்டியப்பட்டவர்கள் கீழே இருந்து பழங்களை எடுத்துக் கொண்டிருந்தனர். சாலைகளில் விழுந்த பழங்களை எடுக்கவும் கடுமையான போட்டி நிலவின. சில பழங்கள் சாக்கடையில் விழுந்துவிட்டன. பிறகு பழம் எடுக்க எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, எடப்பாடி, வேலுமணி படங்கள் தடையாக இருந்தன.

கரும்பு, பழங்கள், குப்பை

இதனால், அந்தப் படங்களை அகற்றிவிட்டு, பழங்களை சாக்குப்பைகளில் போட்டு அள்ளி சென்றனர். சிறிது நேரத்தில், கரும்பு மற்றும் பழங்கள் இரண்டும் காலியாகின. அதேபோல, வாழைத்தார்களும் எடுத்துச் செல்லப்பட்டன. இந்நிலையில் ரொட்டிக்கடை மைதானத்தில் தோரணம் சரிந்து விழுந்து வெள்ளையம்மாள் என்பவருக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என கூறி, அந்த வார்டு செயலாளர் லட்சுமணன் அலுவலகத்தை வெள்ளையம்மாளின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

எடப்பாடி வருகைக்கு முன்பு பளீச் சுத்தத்தில் காணப்பட்ட அந்தப் பகுதி, அதையடுத்து கரும்பு, பூ, பழங்கள் போன்றவற்றால் குப்பைக் காடாகியது. அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் அப்படியே சென்றுவிட்டனர். இதனால், அந்தப் பகுதி மக்கள் குப்பைகள் மீதே சென்று கொண்டிருந்தனர். இதற்கு நடுவே, பழங்களை எடுக்க அதீத ஆர்வத்தில் போட்டி போட்டுக் கொண்டிருந்த ஒருவரின் செல்போன் காணாமல் போய்விட்டது. அவர்கள் வருத்தத்துடன் `போனை காணவில்லை’ என மைக்கில் அறிவிப்பு வெளியிட்டனர். இலவசமாகக் கிடைக்கும் பொருள்களுக்கு மக்கள் ஆர்வம் காட்டத்தான் செய்வார்கள்.

சாலை குப்பை

ஆனால், சில நிமிடம் வந்து செல்லும் முதல்வருக்காக இத்தனை ஏற்பாடுகளை செய்யும் அரசு நிர்வாகம், அங்கு எப்போதும் இருக்கும் மக்களுக்கும் அதேபோன்று செயல்படவேண்டும் என்பதுதான் வெகுஜன மக்களின் எதிர்பார்ப்பு. அதைவிட்டு, அந்தப் பகுதியை குப்பைக் காடாக்க வழிவகுக்கக் கூடாது. ஏனென்றால், மக்களால் நான் மக்களுக்காக நான் என்று சொல்லி சென்ற தலைவரின் வழிநடக்கும் கட்சி அது.

Read Entire Article