மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.688½ கோடி

5 days ago 3

சென்னை, பிப்.23–

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.688½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று இன்று சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அவர் மேலும் பேசியதாவது:–

மாற்றுத்திறனாளிகள் நலன்

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை முனைப்புடன் செயலாற்றி வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்காக கண்டறியப்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை இந்த அரசு, தொடங்கியுள்ளது. 1,510 மாற்றுத் திறனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், தொகுதி A மற்றும் B ஆகியவற்றிலுள்ள 559 பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு ஆட்சேர்ப்பு முகமை வாயிலாக 2020-21ஆம் ஆண்டில் இதுவரையில் தனியார் துறையில் 248 மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் தேசிய நிறுவனத்திலிருந்து தொழில்நுட்ப உதவியுடன் விரிவான மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கு ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மனவளர்ச்சிக் குறைபாடு, மூளை முடக்குவாதம், தசைச்சிதைவு நோய், பலவகை குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைகள் வழங்கப்படும்.

உடல் ஊனங்களை வருமுன் காப்பதற்கும், அதனைக் கையாளுவதற்கும் ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறையை செயல்படுத்தவும், மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்புகள் மற்றும் வசதிகளை உறுதி செய்வதற்காகவும், இந்த அரசால் 1,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ‘RIGHTS’ என்ற சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கு, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையின் ஆய்வுக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், தற்போது உலக வங்கியின் பரிசீலனையில் உள்ளது. 2021–22ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 688.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு

விளையாட்டு மற்றும் விளையாட்டு சார்ந்த நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. முதலமைச்சரால் தொடங்கப்பட்ட ‘அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்’, வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில்38.85 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன், 2021–22ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். திருப்பூர் மாவட்டத்திலுள்ள சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திறந்தவெளி அரங்கத்தினை கட்டுவதற்காக 9 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஏலகிரியில் உள்விளையாட்டு அரங்கத்தை கட்டுவதற்காக 4.92 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

கேரம், டேக்வோண்டோ, ஜூடோ, வாள்வீச்சு, பிரிட்ஜ் மற்றும் ஏனைய உள்ளரங்க விளையாட்டுகளுக்காக, மாநில அளவிலான பயிற்சி மையம் 17.47 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில், பாரம்பரிய மற்றும் சாகச விளையாட்டுகளுக்கான மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்காக 229.37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article