புதுச்சேரி அரசியல்: தமிழிசை வசமுள்ள அந்த 3 வாய்ப்புகள்... பரபரப்பான அடுத்த கட்டம் - என்ன நடக்கும்?!

1 day ago 2

கடந்த சில வாரங்களாகவே புதுச்சேரி அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. அதிலும் கடந்த திங்கள்கிழமை அன்று ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் புதுச்சேரி அரசியலை நோக்கியே இருந்தது. புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததுதான் இதற்குக் காரணம்.

அடுத்து என்ன?

ஆளும் கட்சிக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையேயான பிரச்னை, துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாகத் தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டது, தொடர்ச்சியாக ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்களும், அமைச்சர்களும் ராஜினாமா செய்தது, நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது எனப் பரபரப்பாக இருந்து வந்த புதுச்சேரி அரசியலில், அடுத்து என்ன நடக்கும், என்ற கேள்விதான் அனைவரது மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. புதுச்சேரி சட்டப்பேரவை

Also Read: `நாராயணசாமியின் ஒன்றேகால் மணி நேர உரை; ஆட்சிக் கவிழ்ப்பு!’ புதுச்சேரி சட்டசபையில் என்ன நடந்தது?

கடந்த திங்கள்கிழமை அன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், காங்கிரஸ் கூட்டணி அரசு ராஜினாமா செய்தது. தற்போதைய புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆட்சி காலம் வருகிற ஜூன் மாதத்தோடு முடிவடைகிறது. இந்தநிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியை இழந்ததால், துணைநிலை ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதை அரசியல் உலகம் உற்று நோக்கி வருகிறது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் தற்போது மூன்று வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகள் என்னென்ன என்பதை பார்ப்போம்:

முதல் வாய்ப்பு

தற்போதைய நிலவரப்படி ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-க்கள் நீங்கலாக, புதுச்சேரி சட்டமன்றத்தில் 26 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். இதில் பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை 14. ஆனால், காங்கிரஸ் கூட்டணியின் வசம் 12 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர். எதிர்க்கட்சியான என்.ஆர் காங்கிரஸ் வசம் ஏழு எம்.எல்.ஏ-க்களும், அ.தி.மு.க-விடம் நான்கு எம்.எல்.ஏ-க்களும் இருக்கின்றனர். அதேபோல பா.ஜ.க-வைச் சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்தால் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு மொத்தம் 14 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, இந்த எண்ணிக்கையைக் கொண்டு என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கத் துணைநிலை ஆளுநரிடம் உரிமை கோரலாம்.

முன்னாள் முதல்வர் ரங்கசாமி

அப்படி என்.ஆர். காங்கிரஸ் - அ.தி.மு.க - பா.ஜ.க இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தால் அது நாராயணசாமிக்கு ப்ளஸ்ஸாக அமையும். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் மூன்று கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சியமைத்தால், “இந்த மூன்று கட்சிகளும் இணைந்துதான் எங்கள் ஆட்சியைக் கலைத்துவிட்டன'' என்று சொல்லி நாராயணசாமி வாக்கு சேகரிக்க வாய்ப்புண்டு. அப்படி நடந்தால் அனுதாப ஓட்டுகள் காங்கிரஸ் பக்கம் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இரண்டாவது வாய்ப்பு

இரண்டாவது வாய்ப்பாக, காபந்து அரசாகச் செயல்பட அனுமதிக்குமாறு துணைநிலை ஆளுநரிடம் நாராயணசாமியே கேட்டுக் கொள்ளலாம். அதனை ஏற்றுக் கொண்டு மீண்டும் நாராயணசாமியை முதல்வராகச் செயல்படத் தமிழிசை செளந்தரராஜன் அனுமதிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

நாராயணசாமி

Also Read: புதுச்சேரி: `பா.ஜ.க முதல்வர் வேட்பாளரா கிரண் பேடி?’ - என்ன சொல்கிறார் நாராயணசாமி

ஆனால், அப்படி காபந்து அரசாகச் செயல்பட்டால், நாராயணசாமி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துகொண்டு,``என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய மூன்று கட்சிகள் இணைந்துதான் எங்கள் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டன'' என்று தற்போது வைத்துக் கொண்டிருக்கும் குற்றச்சாட்டை வலுவாக வைக்க முடியாமல் போகலாம்.

மூன்றாவது வாய்ப்பு

புதுச்சேரியில் ஏப்ரல் - மே மாதத்துக்குள் தேர்தல் நடைபெறவுள்ளதால், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரைக்க வாய்ப்புகள் உள்ளது.

ஒருவேளை குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தால், அது பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக அமையும். காரணம், தேர்தல் பிரசாரத்தின் போது நாராயணசாமிக்கு முதல்வருக்கான எந்த சலுகையும் இருக்காது. எனவே மற்ற கட்சிகளைப் போலவே காங்கிரஸும் பிரசாரத்தில் ஈடுபட வேண்டியிருக்கும். குடியரசுத் தலைவர் ஆட்சி என்பதால் பா.ஜ.க-வுக்கு தேர்தல் கூட்டங்கள் நடத்தக் கூடுதல் சலுகைகள் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

தமிழிசை சௌந்தரராஜன்

இந்த மூன்று வாய்ப்புகளில் ஒன்றுதான் புதுச்சேரியில் அரசியலில் அடுத்து அரங்கேறியாக வேண்டும். இதில் மூன்றாவது வாய்ப்பான `குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரைப்பது' என்பதைத்தான் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் முடிவாக எடுப்பார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கடந்த சில நாள்களாகப் பல திருப்பங்களைச் சந்தித்து வரும் புதுச்சேரி அரசியல் களத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையே நீடித்து வருகிறது. எனவே, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Read Entire Article