புதுக்கோட்டை: காதலியைப் பார்க்க மொட்டை மாடியில் காத்திருந்த காதலனுக்கு நேர்ந்த துயரம்!

1 week ago 2

புதுக்கோட்டைப் பாலன் நகரைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன் நல்லையா (24). 12-ம் வகுப்பு வரையிலும் படித்துள்ள நல்லையா, கோயம்புத்தூரில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கும் மேலாக அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்த அந்தப் பெண்ணின் அண்ணன் பிரபு, காதலைக் கைவிடுமாறு நல்லையாவைக் கண்டித்துள்ளார். ஆனாலும், நல்லையா தன் காதலைக் கைவிடவில்லை. காதலியைப் பார்க்க அவ்வப்போது வேலைபார்க்கும் இடத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்துவிடுவாராம்.

நல்லையா

விடுமுறையில் ஊருக்கு வந்தவர் யாருக்கும் தெரியாமல் காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். காதலிக்காக வீட்டு மொட்டை மாடியிலேயே பல மணி நேரம் காத்திருந்துள்ளார். இரவு ஆகியும் தொடர்ந்து காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே நல்லையா, தன் வீட்டிற்கு வந்ததை அறிந்த பிரபு, வீட்டின் மொட்டை மாடிக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது, மாடியில் நல்லையா இருந்துள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த பிரபு, நல்லையாவைக் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். நல்லையாவிற்கு தலையில், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நல்லையாவின் தாய் காமாட்சிக்கு இதுபற்றி தகவல் தெரிவித்த பிரபு, `இனிமேல் என் தங்கச்சியைப் பார்க்க இவன் வரக்கூடாது’என்று கூறி எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார். வீட்டுக்குக் கூட்டிச் சென்ற காமாட்சி, தலையில் மகனுக்குக் கட்டுப்போட்டு முதலுதவி சிகிச்சை கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்த நல்லையா, பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்காக நல்லையாவின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிரபு

நல்லையாவின் தாய், காமாட்சி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருக்கோகர்ணம் போலீஸார், பிரபுவைக் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தங்கையைக் காதலித்துவிட்டான் என்பதற்காக, ஆத்திரத்தில் காதலனை அடித்துக் கொலை செய்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article