பா.ஜ.க-வுக்கு மானாமதுரை; அ.தி.மு.க எம்.எல்.ஏ கலக்கம் - திடீர் கிடாய் விருந்தின் பின்னணி!

5 days ago 2

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை என நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில், மானாமதுரை தனித் தொகுதியாக இருந்து வருகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க கீழடி, இந்த தொகுதிக்கு உட்பட்டு வருகிறது. அ.தி.மு.க-வின் கோட்டை என சொல்லப்பட்ட மானாமதுரை தொகுதி தற்போது கூட்டணி கட்சியான பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மடப்புரம் கோயிலில் எம்.எல்.ஏ நாகராஜன்

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் தொகுதி மக்களுக்கு விருந்து வைக்கின்றனர். இந்நிலையில், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ நாகராஜனும், தொகுதிக்குட்பட்ட மடப்புரம் பத்திரகாளி கோயிலில் 15 கிடாய் வெட்டி மக்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு விருந்து விழா நடந்ததாகக் கூறப்பட்டாலும், வேறு ஒரு தகவல் பற்றியும் ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கொள்கிறார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில், காரைக்குடி தொகுதி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனுக்கும், சிவகங்கை தொகுதி அமைச்சர் பாஸ்கரனுக்கும் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுவதால், மானாமதுரை சீட்டை கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க-வுக்கு அ.தி.மு.க தாரை வார்க்கும் என கட்சிக்குள் பேச்சு நிலவுகிறது. இதனால் கலக்கத்தில் உள்ள மானாமதுரை எம்.எல்.ஏ நாகராஜன், தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு கிடாய் விருந்து கொடுத்தாகச் சொல்கிறார்கள்.

கோயில் பூஜையில் எம்.எல்.ஏ நாகராஜன்

மானாமதுரை அ.தி.மு.க நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்தோம். ``18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கப்பட்ட போது, மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனால், மானாமதுரையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க வேட்பாளரைவிட 8,194 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அ.தி.மு.க வேட்பாளர் நாகராஜன் வெற்றி பெற்றார். தற்போது எம்.எல்.ஏ-வாக உள்ள நாகராஜன் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் மற்றும் அமைச்சர் பாஸ்கரனுடன் நெருக்கமாக இருக்கிறார்..

ஆனால், அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்பதால், மானாமதுரை தொகுதியை பா.ஜ.க-வுக்கு ஒதுக்கலாம் எனப் பேசி வருகிறார்கள். இதனால், நாகராஜன் கலக்கத்தில் உள்ளார். தனக்கு சீட்டு கிடைத்து வெற்றி பெற வேண்டும் என இப்பகுதியின் துடியான தெய்வமான மடப்புரம் பத்திரகாளி கோயிலுக்கு கிடாய் வெட்டியுள்ளார். அவரின் தேர்தல் வேண்டுதல் நிறைவேறினால் இன்னும் நிறைய கிடாய் வெட்டுவார்” என்று தெரிவித்தனர்.

மடப்புரம்

கிடாய் வெட்டு விருந்து குறித்து மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ நாகராஜனிடம் கேட்டோம். ``அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டுதான் கிடாய் வெட்டு விருந்து நடத்தினேன். அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அமைய வேண்டும் என்பதையும் வேண்டிக் கொண்டோம். மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோயிலில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். அதனால், இங்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தேன்.

Also Read: சிவகங்கை: `பதியும்போதே வாங்குனாங்க; இப்பவும் பணம் கேட்டா எப்படி?’- கொதித்த மக்கள்

அடுத்ததாக சட்டமன்றக் கூட்டம் முடிந்ததும் இளையான்குடி ஒன்றியத்தில் தாயமங்கலம் முத்துமாரி கோயிலிலும், மானாமதுரை ஒன்றியத்தில் தல்லாகுளம் முனியப்பன் கோயிலிலும் கிடாய் வெட்டு நிகழ்ச்சி நடத்த உள்ளேன்.

மடப்புரத்தில் விருந்து ஏற்பாடு

சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக கிடாய் விருந்து வைக்கவில்லை. அது முற்றிலும் பொய்யான தகவல். எனக்கு கண்டிப்பாக சீட்டு கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சீட்டு கிடைத்தால் நிற்பேன். கிடைக்கவில்லை என்றாலும் கட்சிக்காக வேலை செய்வேன். தலைமை என்ன முடிவு செய்தாலும் ஏற்றுக்கொண்டு செயல்படுவேன். கழகத்திற்காக 5 முதல் 10 முறை சிறைக்கு சென்றுள்ளேன். அதனால் அ.தி.மு.க மீது எப்போதும் விஸ்வாசத்துடன் தலைமையின் உத்தரவை ஏற்று செயல்படுவேன். மானாமதுரை தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை. அதனால் இங்கு பா.ஜ.க-வுக்கு சீட் ஒதுக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். என்னை பொறுத்தவரை மீண்டும் அ.தி.மு.கதான் மானாமதுரையில் போட்டியிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை” என்றார்.

Read Entire Article