நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் மேலாண்மை குழு நேரில் ஆய்வு

1 month ago 3

விழுப்புரம்,ஜன.24–

விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கூடுதல் செயலாளர் டாக்டர். திருப்புகழ் மற்றும் இணை ஆலோசகர் டாக்டர்.பவன் குமார் சிங் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலிஞ்சிக்குப்பம் ஊராட்சியினை சேர்ந்த விவசாய நிலத்தில் நிவர் புயலினால் சேதமடைந்த வாழை மரங்களையும், சொரப்பூர் ஊராட்சியில் விவசாய நிலத்தில் சேதமடைந்த நெற்ப் பயிர்களையும்,வீராணம் ஊராட்சியில் நிவர் புயலினால் பாதிக்கப்பட்ட மலட்டாறு ஆற்றங்கரையினையும் மற்றும் விழுப்புரம் வட்டம் தாமரைக்குளம் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளையும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கூடுதல் செயலாளர் டாக்டர் திருப்புகழ் மற்றும் இணை ஆலோசகர் டாக்டர்.பவன் குமார் சிங் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைதொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நிவர் புயல் பாதிப்புகள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கூடுதல் செயலாளர் டாக்டர். திருப்புகழ் மற்றும் இணை ஆலோசகர் டாக்டர்.பவன் குமார் சிங் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

தொடர்ந்து விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நிவர் புயல் பாதிப்புகள் குறித்த ஆய்வுக்கூட்டம் டாக்டர்.திருப்புகழ் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினரிடம் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் பாதிப்புகள் குறித்து வேளாண்மைத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களிடம் பயிர்ச்சேதம், சாலைகளின் சேதம், மின்மாற்றிகள் மற்றும் தெருவிளக்குகளின் சேதம், மீன்பிடிபடகுகள் மற்றும் வலைகளின் சேதம்,கால்நடை உயிரிழப்புகளின் சேதம்,வீடுகளின் சேதம் மற்றும் ஏரி மற்றும் ஆறுகளினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து விவரங்களை டாக்டர்.திருப்புகழ் துறை வாரியாக விரிவாக கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஸ்ரேயா. பி.சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், கூடுதல் இயக்குநர் வெ.மகேந்திரன், சார் ஆட்சியர் டாக்டர்.எஸ்.அனு,(திண்டிவனம்), வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Read Entire Article