தொழிற்சாலைகளில் சிறார்களை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் எச்சரிக்கை

1 month ago 3

காஞ்சீபுரம், ஜன. 23 –

தொழிற்சாலைகளில் சிறார்களை பணிக்கு அமர்த்தியிருப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் எச்சரித்துள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் குழந்தைகளைப் பாதித்தது மற்றும் அவர்களைப் பாதுகாத்த விதம் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெ.சண்முகப்பிரியா, வருவாய் அலுவலர் (பொறுப்பு) மணிவண்ணன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எம்.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு தேசிய குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர்.ஆர்.ஜி.ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:

காஞ்சீபுரத்தில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. எந்த தொழிற்சாலை யிலாவது சிறார்களை பணிக்கு அமர்த்தியிருப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலையை பூட்டி சீல் வைக்கவும் அதிகாரம் உள்ளது. பணிக்கு சேர்க்கும்போது அவர்கள் சிறார்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தால் அவர்களது ஆதார் அட்டை, சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே பணிக்கு சேர்க்க வேண்டும்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு தொலைபேசி எண் 1098 குறித்து கோயில்கள், சுற்றுலாத்தலங்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகிய இடங்களில் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். காஞ்சீபுரம் மாவட்டத்துக்கென குழந்தைகள் நலக் குழுமக் குழு விரைவில் உருவாக்கப்படும். தமிழகத்தில் முதல் முறையாக குழந்தைகள் பாதுகாப்புக்கென கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் தனியாக தொலைபேசி எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு கண்காணிக்கப்பட்டிருப்பது பாராட் டுக்குரியது. கோயில்கள் முன்பாக பிச்சை எடுத்த 18 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.

நீதிபதி செந்தில்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குநர் வி.கே.பழனி, மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன், உறுப்பினர் சக்திவேல், மனித வர்த்தக கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உட்பட பல்வேறு துறைகளின் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Read Entire Article