தேனி: முளைக்காத நிலக்கடலை விதைகள்... கலெக்டர் அலுவலக வாசலில் கொட்டிய விவசாயி!

1 day ago 1

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளிதாஸ். தனக்குச் சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்ய திட்டமிட்டு, கடந்த டிசம்பர் மாதம் சின்னமனூரில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்துக்குச் சென்று விதை கேட்டுள்ளார். 36 கிலோ எடை கொண்ட 4 மூட்டை நிலக்கடலை விதைகளை கொடுத்துள்ளனர் அதிகாரிகள். அதற்காக ரூ.8,000 செலுத்திய காளிதாஸ், விதை நிலக்கடலைகளை வீட்டுக்கு எடுத்துவந்து உடைத்துப் பார்த்துள்ளார்.

காளிதாஸ்

அதில், பெரும்பாலான விதைகள் தரமற்றதாக இருந்துள்ளது. இருந்தபோதும், அரசின் விதை என்பதால், அதைத் தனது நிலத்தில் விதைத்துள்ளார் காளிதாஸ். நிலக்கடலைச் செடிகள் வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளது. இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்ட காளிதாஸ், அவர்களிடமிருந்து உரிய பதில்கள் ஏதும் கிடைக்காததால், கலெக்டர் அலுவலக வாசலில், நிலக்கடலை விதைகளைக் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அவரை சமாதானம் செய்த போலீஸார், கலெக்டரிடம் புகார் மனு கொடுக்க அறிவுறுத்தினர். அதையடுத்து கலெக்டரிடம் சென்று புகார் மனு கொடுத்தார் காளிதாஸ். மனு மீது நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உறுதியளித்தார்.

காளிதாஸ்

இது தொடர்பாக விவசாயி காளிதாஸ் கூறும்போது, "அரசு விதை கொடுக்கிறது என்று நம்பிதான் விதைத்தேன். ஆனால், வளர்ச்சியே இல்லாமல் இருந்தது. உரம், ஊட்டச்சத்து என எத்தனையோ கொடுத்தும் பலன் இல்லை. சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகளிடம் போய் கேட்டேன். `முளைக்கவில்லை என்றால் என்ன, மீதம் இருக்கும் விதைகளை ஆட்டினால், எண்ணெய் கிடைக்கும் கடலை எண்ணெய் நல்ல விலைக்கு போகும்’ என்று சொன்னார்கள். எனக்கு ரொம்ப மன வேதனையாக இருந்தது. அதனால்தான் கலெக்டர் ஆபீஸ்க்கு வந்தேன். 100% முளைப்புத் திறன் கொண்ட விதைனு எனக்கு விற்பனை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கணும். எனக்கு நல்ல தரமான விதைகளைக் கொடுக்கணும்” என்றார் அழுத்தமாக.

Also Read: `விதை நெல்லிலும் கலப்படமா?' - வேளாண்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

Read Entire Article