சென்னை, ஏப்.8–
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தேர்தல் பிரச்சாரத்தின் பொது வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக சார்பில் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகனுக்கு, கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள துரைமுருகன், ஏற்கனவே கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.