தாமதித்த முதல்வர்; உயிரிழந்த முதியவர் - விழுப்புரம் பரப்புரையில் நடந்த சோகம்!

6 days ago 2

தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக நேற்று விழுப்புரத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார் எடப்பாடி பழனிசாமி. விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில், விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மிகவும் இக்கட்டான இடத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடை அமைப்பதற்கு மட்டுமே அந்த இடம் சரியாக இருந்ததால் கட்சி தொண்டர்கள் அமர்வதற்கும் இடவசதி இல்லாமலிருந்தது. நிழற்குடைகளோ, பந்தலோ அமைக்கப்படாததால் நீண்ட சாலையில் கொளுத்தும் வெய்யிலில் நின்றிருந்தனர் அ.தி.மு.க தொண்டர்கள். மாலை 4.00 மணியளவில் விழுப்புரம் பழைய பேருந்து நிலயத்தில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் பங்குகொண்டு பேசுவார் என கூறப்பட்ட நிலையில் மாலை 6.45-க்கே அவர் வந்து சேர்ந்தார்.

பேனர்கள்

முதலமைச்சர் வர நீண்ட நேரமானதால், வெய்யிலில் காத்திருந்த நடுக்குப்பம் அடுத்த வண்டிப்பாலையத்தை சேர்ந்த அ.தி.மு.க கிளை செயலாளர் அய்யாவு(60) என்பவர் சுருண்டு விழுந்து மயங்கினார். அவர், சுமார் இரண்டு மணியளவிலேயே கூட்டத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு சற்று சலசலப்பு நிலவியது.

பின், மாலை 6.45 மணி அளவில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் வந்த முதல்வர் பழனிசாமி, அதன் அருகிலேயே புதியதாக சீரமைக்கப்பட்ட பூந்தோட்டம் குளத்தையும், பூங்காவையும் திறந்து வைத்தபின் மேடைக்கு வந்து 1502.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்’ மற்றும் ‘மரக்காணம், அழகன்குளத்தில் 235 கோடி ரூபாயில் அமையவுள்ள மீன்பிடித் துறைமுகத்திற்கும்’ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இறந்த அய்யாவு

நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி “ சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு குறை கூறுகிறார்கள். அம்மா அரசு என்ன செய்திருக்கிறது என்று கேட்கிறார் ஸ்டாலின். ‘எதை செய்வோம் என நினைக்கிறோமோ அதை சொல்கிறோம். சொன்னதை செய்கிறோம்’ அதுதான் எங்கள் நோக்கம், லட்சியம். அதை நிறைவேற்றியும் வருகிறோம். ஒரு வருடத்திற்கு முன்பு நான் வரும்போது இந்த இடம் குப்பைமேடாக இருந்தது. பூந்தோட்ட குளம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார் சி.வி.சண்முகம். அதன்படி, இன்று மிகவும் அழகாக மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் இருந்த படத்தை பாருங்கள், இன்று இருக்கும் குளத்தை பாருங்கள். ஸ்டாலின் அவர்களே இந்த குளத்தை வந்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். உங்கள் பிரதிநிதி பொன்முடியை அனுப்பி பார்க்கச் சொல்லுங்கள்.

விழுப்புரத்தில் எடப்பாடி

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும், 53 மினி கிளினிக் கட்டியுள்ளோம். 152 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள கடன் 451 கோடி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 55,000 பேருக்கு பட்டா கொடுத்துள்ளோம். நகரப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு 1 சென்டிலிருந்து இரண்டு சென்டாக வீட்டுமனைப்பட்டா உயர்த்தி கொடுத்துள்ளோம்.

நிலம் இல்லாத, வீடு இல்லாத, ஏழை மக்களுக்கு அரசு நிலம் வாங்கி கான்கிரீட் வீடு ,நகர மக்களுக்கு அடுக்குமாடி கான்கிரீட் வீடு, என தமிழகத்தில் வீடு இல்லாதவர்கள் இல்லை எனும் நிலையை உருவாக்கித் தருவோம். ஒரே நேரத்தில் 11 மருத்துவக்கல்லூரி, 7 சட்டக்கல்லூரி கொண்டுவந்துள்ளோம். ஆனால் ஸ்டாலின், ‘எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை’ என பச்சை பொய் பேசுகிறார். 27 கோடி ரூபாயில் நந்தன் கால்வாய் திட்டத்திற்கு காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அலங்கார நுழைவு வாயில்

விழுப்புரம், திண்டிவனம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தையும் நிறைவேற்றும் இந்த அரசாங்கம். சிறப்பு நிதியாக விழுப்புரம் நகராட்சிக்கு 50 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். இந்த ஒரு மாவட்டத்திற்கு மட்டும் இவ்வளவு திட்டம் கொண்டுவந்துள்ளோம். சாலையை சிறப்பாக அமைத்துள்ளோம், பள்ளிகளை மேம்படுத்தி உள்ளோம். நீட் தேர்வில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலமாக அரசு பள்ளியில் பயின்ற ஏழை, எளிய மாணவர்கள் சுமார் 435 பேர் மருத்துவ படிப்பு படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளோம். அவர்களின் கல்வி செலவையும் அரசே ஏற்றுள்ளது.

எப்போதெல்லாம் மக்கள் துன்பப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் மக்களை மீட்கும் அம்மா அரசாங்கம். ஏழை மக்கள் ஏற்றம்பெற வேண்டும், கிராமம் வளர்ச்சி அடைய வேண்டும், பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும். அதற்கெல்லாம் அரசு முன்னுரிமை கொடுத்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது” என பேசி முடித்தார்.

Also Read: எடப்பாடி மீதான வருத்தம்; சசிகலாவின் தூது - யூகங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்த வைத்திலிங்கம்!

நிகழ்ச்சி முடியும் தருவாயில் 6 வயதிற்கு உட்பட்ட மூன்று சிறு குழந்தைகளுடன் கணவனை இழந்த சித்ரா என்பவர் வேலை வாய்ப்பு கேட்டும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த தன் தாயின் மரணத்துக்கு இழப்பீட்டுத் தொகை கேட்டும், ரமேஷ் என்பவரும் முதல்வரை சந்தித்து மனு கொடுக்க சென்றனர். கருப்பு ஆடை அணிந்திருந்த காவலர்களே மனுக்களை பெற்றுக் கொண்டதாகவும், முதல்வரை பார்க்க முடியவில்லை எனவும் கூறினர். இதற்காக காலை 9 மணியிலிருந்து காத்திருந்தோம். ஆனால், முதல்வரை பார்க்க முடியவில்லை என்றனர் வருத்தத்துடன்.

Read Entire Article