`தங்கை, தம்பிகள் அழுறாங்க... நிறுத்துங்க!’ - பெற்றோர் சண்டையால் விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவி

9 months ago 142

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோவிலூர் சம்பாமனை கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பழனிவேல். இவர்களுக்கு 4 பிள்ளைகள். இவரின் மூத்த மகள் சுமித்திரா (20). புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மைக்ரோ பயாலஜி படித்து வந்தார். தற்போது கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால், பள்ளிக் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், சுமித்திரா வீட்டில் இருந்துள்ளார். சுமித்திராவின் தந்தை பழனிவேலும் அவரின் மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாகத் தினசரி சண்டை போட்டுக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் வழக்கம்போல் ஆரம்பித்த சண்டை பெரிய சண்டையாக மாறவே, தங்கை, தம்பிகள் அழுகிறார்கள் தயவு செய்து சண்டை போடுவதை நிறுத்துங்க ப்ளீஸ் என்று பெற்றோரிடம் சுமித்திரா கெஞ்சிக் கூத்தாடியுள்ளார். ஆனாலும், இருவரும் சண்டையை நிறுத்தியபாடில்லை என்று கூறப்படுகிறது.

தற்கொலை

இந்த நிலையில், மன விரக்தியடைந்த சுமித்திரா சட்டென்று கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியே சென்றவர், அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, தகவலறிந்த ஆலங்குடி தீயணைப்புத்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி இறுதியில் சடலமாக மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, "கணவன்-மனைவி இருவரும் பிள்ளைகளை வைத்துக்கொண்டே தினமும் சண்டை போட்டு வந்துள்ளனர். சொல்லி சொல்லிப் பார்த்தும் திருந்தாததால், கல்லூரி மாணவி பரிதாபமாகத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கணவன் மனைவிக்கிடையே நடைபெற்ற சண்டை மாணவியின் உயிரைக் காவு வாங்கிவிட்டது. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

Read Entire Article