`ஜூன் 1-ல் பத்தாம் வகுப்புத் தேர்வு... மாணவர்களின் மனநிலை எப்படியிருக்கும்?' - உளவியல் நிபுணர்

9 months ago 183

கொரோனா, அதைத் தொடர்ந்த ஊரடங்கு காரணமாக ஏப்ரலில் நடக்க வேண்டிய பத்தாம் வகுப்பு தேர்வு, ஜூன் முதல் வாரத்தில் நடக்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆசிரியர்கள் சிலர், தங்களுடைய முகநூலில் ‘ஆசிரியர்களுக்கு மட்டும்தான் மாணவர்களின் மனநிலை நன்கு தெரியும்.

மிக நீண்ட விடுமுறைக்கு அடுத்த நாளே தேர்வு வைத்தால் அவர்களுடைய மனம் அதில் பதியாது. ஏனென்றால், மாணவர்கள் தற்போது ஆசிரியர்களாகிய எங்களைவிட்டு மனதளவிலும் வெகு தூரத்தில் இருக்கிறார்கள்.

அவர்கள் எங்கள் பக்கத்திலேயே இருக்கும்போது மாணவர்களின் படிப்பின் தன்மையைப் பொறுத்து ‘இந்தக் கேள்வியையெல்லாம் கட்டாயம் படிச்சுக்கோங்க’, ‘மேத்ஸ் பேப்பர்ல 10 மார்க் கேள்வியில ஆன்ஸர் வரலைன்னாலும் பரவாயில்ல. ஃபார்முலா, ஸ்டெப்ஸையெல்லாம் எழுதுங்க. அதுக்கு ரெண்டு, மூணு மார்க் கிடைக்கும்’னு ஸ்டடி ஹாலிடேஸ் முன்னாடி வரைக்கும் சொல்லிக்கொண்டே இருப்போம். அதனால், அவர்கள் முதலில் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுடன் கனெக்ட் ஆகட்டும். அதன் பிறகு பத்தாம் வகுப்பு தேர்வுக்கான தேதியை அறிவியுங்கள்' என்று பதறியிருக்கிறார்கள்.

Public Exam @Pandemic

மாணவர்கள் பிளஸ் ஒன்னில் என்ன குரூப் எடுத்துப் படிக்கலாம், கல்லூரியில் என்ன மேஜர் எடுக்கலாம், கரியரில் அவர்களுடைய லட்சியம் என எல்லாவற்றையும் தீர்மானிக்கிற முதல்படியில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கும் அதில் பெறுகிற மதிப்பெண்ணுக்கும் முக்கியப்பங்கு இருக்கிறது. தவிர, இந்தத் தேர்வுதான் அவர்கள் சந்திக்கவிருக்கிற முதல் பொதுத்தேர்வு. கொரோனா பயம், வாழ்க்கையின் முதல் போர்டு எக்ஸாம், ஆசிரியர்களுடன் தொடர்பில் இல்லாதது என்று ஒன்றுக்கு மேற்பட்ட மனஅழுத்தங்களுடன் தேர்வு எழுதப் போகிறார்கள் நம் வீட்டுக் குழந்தைகள். பள்ளி உளவியல் ஆலோசகர் திவ்யபிரபாவிடம் இதுகுறித்துப் பேசினோம்.

‘’ஊரடங்கு மெல்ல மெல்லத் தளர ஆரம்பித்திருப்பதாலும் தேர்வு எழுதுவதில் எந்தத் தளர்வும் செய்ய முடியாத காரணத்தாலும், அரசு, தேர்வுக்கான தேதிகளை அறிவித்திருக்கிறது. தவிர, தேர்வுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கின்றன என்பதும் அரசு தரப்பு நியாயங்களாக இருக்கலாம். வாழ்க்கையில் முதல் முறையாக போர்டு எக்ஸாம் எழுதப்போகிற பதினைந்து வயதுப் பிள்ளைகளின் மனநிலை தற்போது எப்படியிருக்கும் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.

பள்ளி உளவியல் ஆலோசகர் திவ்யபிரபா

கடந்த 2 மாதங்களாக வெளியே போனால் கொரோனா வந்துவிடும் என்று நாம்தான் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்து வந்தோம். இப்போது கொரோனா அதன் உச்சத்தில் இருக்கிற நேரத்தில், ’எக்ஸாம் எழுத வெளியே வா’ என்றால், அந்தப் பிள்ளைகள் மனதில் பயம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. இயல்பான காலத்திலேயே பரீட்சை நேரத்தில் பதற்றமாகிற மாணவர்களுக்கு இந்த நேரத்தில் படபடப்பும் சேர்ந்து வரலாம்.

ஒரு சில பள்ளிக்கூட மாணவர்கள் வேறொரு பள்ளியில் போய் தேர்வு எழுதவேண்டி வரலாம். அப்படிச் செல்கிற இடத்தில் பாதுகாப்பு எப்படியிருக்கும் என்பதும் தெரியாது என்பதால், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என இருதரப்பினருமே பயப்படலாம், பதற்றப்படலாம். தேர்வுக்காக நன்றாகப் படித்த மாணவர்கள்கூட இந்தப் பதற்றம் காரணமாகப் படித்ததையெல்லாம் மறந்துவிடலாம்.

சில மாணவர்கள் இயல்பிலேயே பயந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு மேலே சொன்னபடி நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.’’

Public Exam @Pandemic

முதலில் மாணவர்கள் ஆசிரியர்களைச் சந்திக்கட்டும். அதன்பிறகு அவர்களுக்கு தேர்வு வையுங்கள் என்கிற ஆசிரியர்களின் கோரிக்கை பற்றியும் கேட்டோம்.

‘’மனரீதியாக மாணவர்களை இது பரீட்சைக்குத் தயார் செய்துவிடும் என்பது உண்மைதான். ஆனால், எந்த மாணவர் கொரோனா கேரியராக இருப்பார் என்பது தெரியாது என்பதால், ஆசிரியர்களுக்குத் தொற்று ஆபத்து இருக்கிறது. இதற்கான பாதுகாப்பு வழிமுறைகளைச் செய்துகொண்டு, ஆசிரியர்கள் மாணவர்களைச் சந்திக்க வேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம், மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தால், ‘இந்த சப்கெஜ்ட் கஷ்டமா இருக்கு’, ‘இந்தக் கேள்வி இதுக்கு முன்னாடி நடந்த ரெண்டு பப்ளிக் எக்ஸாம்லேயும் கேட்டிருக்காங்க. கண்டிப்பா படிக்கணும்’ என்பது போன்று தங்கள் உணர்வுகளையெல்லாம் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டிருப்பார்கள். இதனால், மாணவர்கள் மன அழுத்தமில்லாமல் இருந்திருப்பார்கள். இப்போது அந்த வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை.

Public Exam @Pandemic

எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், ஊரடங்கு நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் பிரைவேட் பள்ளிக்கூட மாணவர்களுக்குக் கிடைக்கிறது. இதே வாய்ப்பு எல்லா அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கும் கிடைத்துக்கொண்டிருக்கிறதா என்பதையும் யோசிக்க வேண்டும். தவிர, பிள்ளையை ‘படி’ என்று சொல்வதைத் தவிர, ’பாடம் சொல்லித் தர’ முடியாத எத்தனையோ பெற்றோர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அந்த மாணவர்கள் ஊரடங்கு நேரத்தில் டியூஷனும் சென்றிருக்க முடியாது. அரசு எல்லாவற்றையும் பற்றி யோசித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்’’ என்கிறார் திவ்யபிரபா.

கொரோனா தொற்றில் குழந்தைகள் மிகக்குறைவாகவே நோயைப் பெறுகின்றனர் என்ற போதிலும், அவர்கள் எளிதில் நோய்க்கிருமியைப் பெற்று, பிறரைவிடவும் வேகமாக அதைப் பரப்பிவிடுகின்றனர் என்கின்றன சில ஆய்வுகள். இதனாலேயே,

குழந்தைகளை `Easy Disease Carriers' எனக் குறிப்பிடுகிறார்கள் மருத்துவர்கள்.

இதன் காரணமாகத்தான் ஆரம்பத்திலேயே பள்ளிகளை மூடும்படி உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது. நிலைமை அப்படியிருக்க, இப்போது தேர்வு என்ற போர்வையின்கீழ் குழந்தைகளை மீண்டும் கூட்டமாகக் கூட அனுமதிப்பதென்பது, ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என எச்சரிக்கிறார்கள் சிலர்.

இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர் ஜெயக்குமார் ரெட்டியிடம் கேட்டோம்.

குழந்தைகள் நல மருத்துவர் ஜெயக்குமார் ரெட்டி

``நிச்சயமாக சிக்கல் இருக்கிறது. ஏதாவதொரு மாணவ/மாணவிக்குத் தொற்று இருந்தாலும்கூட, அது மிக எளிதாக மற்ற குழந்தைகளுக்குப் பரவும். தேர்வு மையங்களில் பொதுவான இடத்தில் தண்ணீர், பொதுக் கழிப்பிடம் போன்றவையெல்லாம்தான் இருக்குமென்பதால், நோய் பரவுவதற்கான விகிதம் மிகவும் அதிகம். `சுத்தம் செய்து, டிஸ்இன்ஃபெக்டன்ட் உபயோகித்தபின்தான் அங்கு தேர்வு நடத்தப்படும்' என்று சொல்வதைக் கேட்க முடிகிறது. இந்த விஷயத்தில், மிகவும் கவனமாக இருக்கவேண்டும். தேர்வு இடங்கள் அனைத்தையும், தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்னிருந்தே தினமொரு முறை சுத்தப்படுத்த தொடங்குவது அவசியம்.

ஏற்கெனவே குழந்தைகள் நீண்ட விடுமுறையில் இருந்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, பல நாள் கழித்து சந்திக்கும் நண்பர் கூட்டம் கைகுலுக்கும் வாய்ப்பு மிக மிக அதிகம். நடைமுறையில் அதையெல்லாம் எந்தளவுக்கு நம்மால் தடுக்க முடியும் என்பது கேள்விக்குறிதான். எக்ஸாம் ஃபீவரோடு சேர்த்து, தொற்று குறித்த பயமும் குழந்தைகளின் மனதை வியாபித்திருக்கும் என்பதால், அதைக் களைய வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது.

`தேர்வை நடத்தியே ஆகவேண்டும், தள்ளிப்போட வாய்ப்பே இல்லை' என்ற சூழல் ஏற்பட்டால், குழந்தைகள் வீட்டிலிருந்தே தண்ணீர் - உணவு எடுத்துவர அனுமதிக்கப்பட வேண்டும். அனைத்துக் குழந்தைகளும் வெளியே வரும்போது மாஸ்க் அணிந்திருப்பது கட்டாயம். இந்த விஷயத்தில், பெரியவர்களைப் போல குழந்தைகளுக்கு மாஸ்க் அணியும் பழக்கம் இருக்காது என்பதால், சில குழந்தைகள் மூச்சுத்திணறிப் போகலாம். எனவே காற்றோட்டமான அறைகளைத் தேர்ந்தெடுத்து அங்கு தேர்வு நடத்தப்பட வேண்டும்.

வீட்டிலிருந்து கிளம்பும் நேரம், தேர்வு அறைக்குச் செல்லும் முன் - பின், வீட்டுக்கு வந்தவுடன் கைகளை சோப் கொண்டு குழந்தைகள் நன்கு கழுவ வேண்டும். குழந்தையைப் பெற்றோரே தேர்வு மையத்துக்குத் தனி வாகனத்தில் அழைத்துச் சென்று, திரும்பிக் கொண்டு வந்துவிடுவது சிறப்பு. பொதுப்போக்குவரத்தில் அனுப்பினால், குழந்தைகள் வழியில் யாருடனும் கைகுலுக்காமல் இருக்கிறார்களா எனப் பெற்றோர் உறுதிசெய்வது முக்கியம்.

குழந்தைகள் நல மருத்துவர் ஜெயக்குமார் ரெட்டிவீட்டுக்கு வந்தவுடன், குளித்துவிட்டு வீட்டுக்குள் வருமாறு, பெற்றோர் அவர்களைப் பழக்க வேண்டும். குழந்தை கொண்டு சென்ற புத்தகப்பை, சாப்பாட்டுப்பைகளைக் கூட தினமும் சோப்பு நீரில் துவைத்துவிடுவது சிறப்பு.

அனைத்துத் தேர்வறைகளிலும் சானிட்டைஸர் கட்டாயம் இருக்க வேண்டும். ஆசிரியர் தொடங்கி வாட்ச்மேன்வரை அனைவருக்குமே, கொரோனாவுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு, நெகடிவ் என வந்திருக்க வேண்டும்.

இவை அனைத்தையும் அரசு செய்தால், தேர்வை பயமின்றி நடத்தலாம்" என்றார் அவர் .

பொதுத் தேர்வு குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன் நம்மிடையே பேசும்போது, ``இவ்வளவு அவசரமாக அரசு தேர்வை நடத்துவது அவசியமற்றது. எத்தனையோ நாடுகள், தன்னுடைய பொருளாதாரத்தைக்கூட பின்னுக்குத் தள்ளிவிட்டு மனித உயிர்களை முக்கியமென நினைத்து லாக்டௌனுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. அப்படியிருக்கும்போது, குழந்தைகளை வெளியே வரவைத்து, தேர்வை நடத்தி இவர்கள் என்ன சாதிக்கப்போகிறார்கள் எனத் தெரியவில்லை.

Also Read: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், போட்டித்தேர்வுகள் அவசியமா?

கல்வியாளர் நெடுஞ்செழியன்இந்தியாவில் லாக்டௌன் காரணமாக, பல குடும்பங்கள் வருமானமின்றித் தவிக்கின்றன. அந்த வீடுகளிலுள்ள குழந்தைகள், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கின்றனர். அப்படியிருக்கும்போது, அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துத் தேர்வெழுத வைப்பது, வன்முறையன்றி வேறென்ன?

சரி, தேர்வை வைத்தே ஆகப்போகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கு அரசு சார்பில் என்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? தேர்வு மையங்களைச் சுத்தப்படுத்துவது பற்றியோ, குழந்தைகளை அழைத்து வருவது பற்றியோ, குழந்தைகளுக்குக் கொரோனா பரிசோதனை செய்வது பற்றியோ எந்த வார்த்தையையும் அரசு சொல்லவில்லை.

கல்வியாளர் நெடுஞ்செழியன்

அரசு பள்ளிகள் பலவற்றிலும் மின்விசிறி வசதிகூட கிடையாது. அங்கெல்லாம் அரசு என்ன செய்யப் போகிறதாம்? பள்ளிப் பணியாளர்களுக்கு எப்படி, எப்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன?

இதற்கெல்லாம் அரசிடம் பதிலில்லை. எந்தத் திட்டமும், ஆலோசனையும், முன்னேற்பாடும், முன்னெச்சரிக்கை உணர்வுமின்றி இப்படி நம் வீட்டுக் குழந்தைகளை ஆபத்துக்கு உள்ளாக்குவது, மிகவும் வேதனையளிக்கிறது. இது கண்டிக்கத்தக்க விஷயம். அரசு, முதலில் குழந்தைகளின் பசியை ஆற்ற முயல வேண்டும். ஏனெனில் அது மட்டும்தான் அவர்களை வாழவைக்கும். தேர்வுகளல்ல" என்கிறார் கடுமையாக.

அரசு, தன் முடிவில் இனியாவது மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளுமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அரசின் முடிவு பற்றிய உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பகிருங்களேன்..!

Read Entire Article