சென்னை மாநகர கூட்டாண்மை வளர்ச்சி திட்டம்: 300 மில்லியன் டாலர் உலக வங்கி நிதி உதவி

3 days ago 2

சென்னை, பிப்.23–

சென்னை மாநகர கூட்டாண்மை வளர்ச்சி திட்டத்திற்கு 300 மில்லியன் டாலர் உலக வங்கி நிதி உதவி ஒதுக்கீடு செய்திருக்கிறது என்று இன்று சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அவர் மேலும் பேசியதாவது:–

உலக வங்கியுடன் விரிவான கலந்துரையாடலுக்குப் பின், சென்னை மாநகரக் கூட்டாண்மை ஒரு தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சித் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றின் அனுபவத்தைக் கருத்திற்கொண்டு, பொது சுகாதாரம், போக்குவரத்து, குடிநீர் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் நெகிழ்திறன் வாய்ந்த சேவைகளை வழங்குவதற்கு இத்திட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கான ஒப்புதல் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது. மேலும், உலக வங்கியுடன் கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறும். இத்திட்டத்தின் முதற்கட்டத்தில், நிர்வாகம், கொள்கைகள் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீர்வளங்களை திட்டமிடுதல் மற்றும் நீர்ப் பாதுகாப்பை மேம்படுத்துதல் போன்ற பணிகளை ஒருங்கிணைக்க ஒரு நீர்க் குழுமம் நிறுவப்படும்.

3 கட்டமாக செயல்படுத்தப்படும்

பெருநகரச் சென்னை மாநகராட்சியில் ஆரம்ப சுகாதார சேவைகளின் வசதிகளையும், தரத்தையும் உயர்த்துதல், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து சேவைகளையும், சென்னைப் பெருநகரக் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நீர் வழங்கலையும் விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், மேற்கூறிய நிறுவனங்களின் நிதிநிலையை வலுப்படுத்துதல் மற்றும் பெருநகரச் சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துதல் போன்ற முக்கியமான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் மூன்று கட்டங்களாக ஏழாண்டு காலத்தில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் முதல் கட்டம் 3,140 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும். இதில், உலக வங்கியின் நிதியுதவியாக300 மில்லியன் அமெரிக்க டாலர் அடங்கும்.

நெடுஞ்சாலைகள் துறை

2004-–05 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்’ மூலம் தமிழ்நாட்டில் சாலை வலையமைப்பின் தரம் மேம்படுத்தப்பட்டதுடன், பராமரிக்கப்பட்டு வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2020-–21 ஆம் ஆண்டில் 3,167.28 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்கும், 3,220.60 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளின் ஓடுதளப்பாதை தரத்தினை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கும், 706 பாலங்கள் மற்றும் சிறுபாலங்களுக்கான கட்டுமானப் பணிகளுக்கும் 5,300 கோடி ரூபாய் செலவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

‘ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்’ கீழ், 2011-–12ஆம் ஆண்டிலிருந்து, இதுவரையில் இந்த அரசு, 43,688.67 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்கும்,10,643.38 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளின் ஓடுதளப்பாதை தரத்தினை மேம்படுத்துதல் பணிகளுக்கும், 3,768 பாலங்கள் மற்றும் ஏனைய கட்டுமானப் பணிகளுக்கும் 34,013.60 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

2020-–21ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு 6,023.11 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகவும், சாலை இணைப்புகளை மேம்படுத்துவதற்காகவும், 5 ஆண்டு காலத்தில், 7,964 கிலோமீட்டர் நீளமுள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்டச் சாலைகளின் தரத்திற்கு மேம்படுத்துவதற்கான முடிவை 2017-18ஆம் ஆண்டில் இந்த அரசு எடுத்துள்ளது. டாக்டர்.சி.ரங்கராஜன் குழுவால் பரிந்துரைக்கப்பட்டவாறு, கிராமப்புறப் பகுதிகளின் மூலதனப் பணிகளில் முதலீட்டினை மேலும் அதிகரிப்பதற்கு 2020-–21 ஆம் ஆண்டில், இரண்டு ஆண்டுகளுக்கான இலக்கிற்கு இந்த ஆண்டே ஒப்புதல் அளித்து, 3,063.66 கிலோமீட்டர் நீளத்தில் 1,430 ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளுக்கான பணிகள் 2503.80 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டன. இவற்றுடன், ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்டச் சாலைகளின் தரத்திற்கு மேம்படுத்துவதற்காக திட்டமிட்ட பணிகளை நிறைவேற்ற, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 5 ஆண்டுகளுக்கு மாறாக, 4 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 2020–-21ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு 1,250 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.

ரூ.5171 கோடியில் சாலை மேம்பாடு 2வது கட்டம்

உலக வங்கி நிதியுதவியுடன் ‘தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்’ இரண்டாவது கட்டம் 5,171 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவிட்-19 பெருந்தொற்றினைக் கருத்திற்கொண்டு ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்காக, உலக வங்கி அதன் பங்கினை முன்கூட்டியே வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், மாநில அரசின் பங்காக 906.25 கோடி ரூபாய் செலவில், மாநில அரசு கூடுதலாக இரண்டு துணைத் திட்டங்களை மேற்கொள்வதற்கு உலக வங்கி அனுமதித்துள்ளது. சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 6,448 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 16 தொகுப்புகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, 4 தொகுப்புகளுக்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டன. மீதமுள்ள தொகுப்புகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும். ஆசிய வளர்ச்சி வங்கியுடனான கடன் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படும். இத்திட்டத்திற்காக, 2021–-22ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், 1,274.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5 பகுதிகள் கொண்ட, 133.87 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளில் சென்னை எல்லை சுற்றுச் சாலை திட்டம்,12,301 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன் பகுதி-1 ஐ செயல்படுத்துவதற்கு 2,673.42 கோடி ரூபாய் ஒப்புதலை அரசு வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் இரண்டாம் பகுதி மற்றும் மூன்றாம் பகுதியை செயல்படுத்துவதற்காக, 4,899 கோடி ரூபாய் மதிப்பில், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் சர்வதேச வளர்ச்சி நிதியம் ஆகியவற்றுடன் கடன் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படவுள்ளது. இரண்டாம் பகுதியின் இரண்டு பொறியியல், கொள்முதல், கட்டுமான தொகுப்புகளுக்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கான ஒப்புதல் விரைவில் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக, 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் 2,248.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறைக்காக, திருத்த மதிப்பீடுகளில் 16,316.47 கோடி ரூபாயும், 2021-–22ஆம் ஆண்டின் இடைக்காலவரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 18,750.96 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article