சட்டசபையில் தி.மு.க. அமளி; வெளிநடப்பு

3 days ago 2

சென்னை, பிப்.23–

தமிழக சட்டசபையில் பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் அமளியில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டசபை இன்று காலை 11 மணி கூடியது. 10.57 மணிக்கு சட்டசபைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பட்ஜெட் புத்தக பெட்டியுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வந்தனர். அப்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றார்கள்.

இன்று காலை 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சபாநாயகர் அழைத்தார். அப்போது எழுந்து நின்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேச முற்பட்டார். அப்போது சபாநாயகர் அவரை அனுமதிக்க மறுத்து என்னவென்று கேட்டார்.

அதற்கு துரைமுருகன் எங்கள் கருத்தைச் சொல்லிவிடுகிறேன் என்று கூறினார்.

இதற்கு, நான் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய அவரை அழைத்துவிட்டேன் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

அதற்கு துரைமுருகன், நாங்கள் கருத்தைச் சொல்லிவிட்டால் அதற்கும் சேர்த்தே அவர் பதில் சொல்லட்டும் என்றார்.

நீங்கள் என்ன சொல்லவேண்டுமோ சொல்லுங்கள், மைக் தரமாட்டேன், நீங்கள் பேசுவது சபைக் குறிப்பிலும் ஏறாது என்று சபாநாயகர் தெரிவித்தார்.

அவருக்கு அனுமதி அளித்துவிட்டேன். அவர் பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பிக்கிறார். நீங்கள் உட்காருங்கள் என்றும் சபாநாயகர் கூறினார்.

இதையடுத்து அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு பட்ஜெட் உரையைப் படிக்கத் தொடங்கினார். தி.மு.க. உறுப்பினர்கள் பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை படித்து கொண்டிருந்தபோது, துரைமுருகன் மைக் இல்லாமல் ஒரு அறிக்கையை படித்தார்.

இதன் பின்னர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்தச் சட்டசபையின் கடைசி பட்ஜெட் இது, ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 11வது பட்ஜெட் இது.

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய தனது இல்லத்திலிருந்து காலை 8.15 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டார். அங்கிருந்து ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள இயற்கை விநாயகர் கோவிலுக்குச் சென்று வணங்கிவிட்டுத் தலைமைச் செயலகம் சென்றார்.

தலைமைச் செயலகம் சென்ற அவர் அங்கிருந்து கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் நடக்கும் இடத்திற்கு காலை 10.40 மணிக்கு வந்தார். அவர் வழக்கமாக அணியும் வெள்ளைச் சட்டைக்கு பதிலாக பட்டுச் சட்டை அணிந்து வந்திருந்தார்.

Read Entire Article