கரூர் அருகே இரவு நேரத்தில் டூவீலரில் வந்த இளைஞர் வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் அந்தப் பகுதியில் மின்விளக்குகளை அமைக்காததால், அடிக்கடி விபத்து ஏற்படுவதாகக் கூறி, பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரை அடுத்த வெங்கமேடு குளத்துபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் தனபால் (வயது 37). இவர், கரூரில் உள்ள தனியார் வங்கிகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் காண்ட்ராக்ட் ஏஜென்டாகப் பணியாற்றி வருகிறார்.
Also Read: கரூர்: ஆம்புலன்ஸிலேயே பெண்ணுக்குப் பிரசவம்... 108 உதவியாளருக்குக் குவியும் பாராட்டுகள்!
இந்நிலையில், நேற்று இரவு இவருக்குச் சொந்தமான டூவீலரில், கரூரை அடுத்த லாலாபேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு, நேற்று இரவு 11 மணியளவில் திருச்சி டு கரூர் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

இவரது வாகனம் மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணவாசி ஊராட்சி அருகே வரும்போது, இவருக்குப் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் தனபால் வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த தனபால் தலைமீது, அந்த வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியதால், சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலையில் கூடினர்.
`கரூர் - திருச்சி சாலையில் போதிய மின்விளக்கு வசதிகள் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அருகில் உள்ள டோல்கேட் நிர்வாகம் இங்கு மின்விளக்குகளை அமைக்கவில்லை. அதனால், அடிக்கடி இங்கே விபத்து ஏற்படுகிறது' என்று கூறி, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த மாயனூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் குளித்தலை கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், லாலாபேட்டை காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமாதானம் பேசினர்.

இது குறித்து, அப்பகுதியில் செயல்படும் டோல் பிளாசா மேலாளர் கார்த்திக்கை வரவழைத்து எழுத்துப்பூர்வமாக, `இன்னும் ஒரு வாரத்தில் அந்த பகுதியில் மின் விளக்குகள் அமைக்கப்படும்' என்று எழுதிக் கொடுத்தபிறகு, சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். பிறகு, விபத்தில் உயிரிழந்த தனபாலன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுதொடர்பாக மாயனூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் இந்த அசம்பாவிதம் நடந்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.