`கண்ணீரை வரவழைக்கும் காட்சிகள் அவை..' -புலம்பெயர் தொழிலாளர் விவகாரத்தில் வேதனைப்பட்ட நீதிபதிகள்

9 months ago 128

கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள கடந்த மார்ச் மாதம் முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. முன்னறிவிப்பு இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகினர். தொழில்கள் முடங்கியதால் வருமானம் இல்லாமல், உணவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்பதால் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்ல முற்பட்டனர். பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் தொழிலாளர்களின் பயணம் சிக்கலானது. ஊரடங்கு இரண்டாம், மூன்றாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டதால் வேறுவழியின்றி லாரிகள், சரக்கு வாகனங்கள், நடைப்பயணம் என கிடைக்கின்ற வழிகளில் எல்லாம் சொந்த ஊர்களுக்குச் செல்ல முற்பட்டனர்.

மத்திய அரசு

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், கடந்த மார்ச் 31-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, `மக்கள் யாருமே சாலைகளில் பயணிக்கவில்லை. அனைவருக்கும் முகாம்களில் வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது' என்று பதிலளித்திருந்தது.

ஆனால், அதற்குப் பிறகும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் காட்சிகள் ஊடகங்களில் வந்துகொண்டேதான் இருந்தன. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 29-ம் தேதி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிக்க மத்திய அரசு அனுமதியளித்தது. அதற்கான வசதிகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், மக்கள் புலம்பெயர்வது தொடர்ந்து வருகிறது. பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப்பலிகளும் ஏற்பட்டு வருகின்றன.

Also Read: `நேருக்கு நேர் மோதிய ட்ரக்குகள்; 23 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி!’ -ஊரடங்கில் தொடரும் சோகம்

இது தொடர்பான மற்றுமொரு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ``தொழிலாளர்கள் புலம்பெயர்வதை எங்களால் எப்படித் தடுக்க முடியும். அரசாங்கம்தான் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் 400-க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்டுக்கொண்டு வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள மத்திய அரசையும் தமிழக அரசையும் மனுதாரராக சேர்த்து பதில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள்

அந்தத் தீர்ப்பில், `புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்வதைப் பார்ப்பதற்கு பரிதாபமாக உள்ளது. ஊடகங்களில் வருகின்ற காட்சிகளைப் பார்த்தால் யாருக்கும் கண்ணீர் வராமல் இருக்காது. இது மனிதன் உருவாக்கிய பேரிடர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு சிறிது காலம் பொறுத்துப் பார்த்த தொழிலாளர்கள் குழந்தைகள், குடும்பத்துடன் நடைப்பயணமாகவே சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். பலரும் பசியால் இறந்துள்ளதாகவும் செய்திகள் பதிவாகியுள்ளன. இவர்கள் புறக்கணிக்கப்பட்டது துர்திருஷ்டவசமானது. தொழிலாளர்களைப் பார்த்துக்கொள்வது அவர்களின் சொந்த மாநிலம் மட்டுமல்லாது அவர்கள் வேலை செய்யும் மாநிலங்களின் பொறுப்பும் கூட

Also Read: `சூட்கேஸில் தூங்கும் சிறுவன்; உணவுக்கு சண்டையிடும் தொழிலாளர்கள்!' - லாக்டெளன் பரிதாபங்கள்

டோல்கேட்டுகளை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சோதனை மையங்களாக பயன்படுத்தியிருக்கலாம். நிறைய டோல்கேட்கள் இருக்கின்றன. இந்த இடங்களை தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ வசதிகள் ஆகியவற்றை வழங்கி ஒருங்கிணைக்க பயன்படுத்தியிருக்கலாம். அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட ஏற்படுத்தித் தரப்படவில்லை என்பது கவலையளிக்கிறது' என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக தரவுகள் ஏதேனும் மத்திய அரசால் பராமரிக்கப்படுகின்றவா என்கிற கேள்வியும் எழுப்பியுள்ளது, சென்னை உயர்நீதிமன்றம். இது தொடர்பாக 12 கேள்விகளை எழுப்பி, தற்போது வரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசும் தமிழக அரசும் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Read Entire Article