ஒரே நாளில் 40.63 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வரலாற்று சாதனை

1 day ago 2

சென்னை, பிப்.23–

ஒரே நாளில் 40 லட்சத்து 63 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் வரலாற்று சாதனை படைத்துள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சட்டசபையில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:–

அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்த இந்த அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம் மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு புலம் பெயரும் தொழிலாளர்களும், மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குப் புலம் பெயரும் தொழிலாளர்களும் அந்தந்த மாநிலங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளிலேயே அவர்களுக்கு உரிய மாதாந்திர ஒதுக்கீட்டைப் பெறலாம்.

பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் முன்னுரிமை பெற்ற குடும்பங்களுக்கும், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களுக்கும், மத்திய அரசு கூடுதலான அரிசியை வழங்கியது. அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற நோக்கத்தைக் கடைபிடிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து 880.31 கோடி ரூபாய் கூடுதல் மானியத்துடன் இதுபோன்ற கூடுதல் அரிசி ஒதுக்கீட்டை,

மத்திய அரசின் திட்டத்தில் சேராத மாநிலத்திலுள்ள 90.71 இலட்சம் குடும்பங்களுக்கும் வழங்கியது. சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை, சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. இதன் விளைவாக, மாநில அரசுக்கு 867.40 கோடி ரூபாய் கூடுதல் மானியச் சுமை ஏற்பட்டுள்ளது.

பொங்கலுக்கு ரூ.2500

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மொத்தம் 2,014.70 கோடி ரூபாய் செலவில் 1,000 ரூபாய் ரொக்க உதவி வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில் சென்னை மற்றும் மதுரை மாநகரங்களிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, 283.15 கோடி ரூபாய் செலவில், 1,000 ரூபாய் ரொக்க உதவி கூடுதலாக வழங்கப்பட்டது.

கோவிட்–19 மற்றும் அடுத்தடுத்து தாக்கிய புயல்கள் மற்றும் பருவம் தவறிப் பெய்த கனமழை ஆகிய பாதிப்புகளிலிருந்து மாநிலம் மீண்டு வருவதால், இவ்வாண்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் ரொக்க உதவி, மொத்தம் 5,604.84 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டது.

உணவு மானியத்துக்கு ரூ.9,604 கோடி

2020–21ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீட்டின்படி ஒட்டுமொத்த உணவு மானியம் 6,500 கோடி ரூபாயிலிருந்து 9,604.27 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்தும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியமாகவும், விளிம்புத் தொகையாகவும், 715.61 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை வழங்குதல் மற்றும் கோழிகள் வளர்ச்சி திட்டம் போன்ற முன்னோடித் திட்டங்களை 2011–12ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தியதன் மூலம் கால்நடை வளர்ப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. இத்தகைய திட்டங்கள், ஊரக பொருளாதாரத்தை மாற்றியமைத்ததுடன் பல ஊரக குடும்பங்களின் வருமானத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. இத்திட்டங்களின் விளைவாக அதிகரித்துள்ள கால்நடைகளுக்கு, மேம்படுத்தப்பட்ட சேவைகளை அரசு வழங்கியது. 2011–12ஆம் ஆண்டிலிருந்து, ‘கால்நடை பாதுகாப்பு திட்டத்தின்’ கீழ், மொத்தம் 52,252 முகாம்கள் நடத்தப்பட்டு, ஏறத்தாழ 70 இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 2011–12ஆம் ஆண்டில் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 4.5 இலட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம், பசுந்தீவன சாகுபடியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆண்டுதோறும், 20 இலட்சம் மெட்ரிக் டன் பசுந்தீவனம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தேனி, தலைவாசல், உடுமலையில் கால்நடை மருத்துவ கல்லூரி

2011–12ஆம் ஆண்டு முதல் சிறந்த கால்நடை மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக, 440 புதிய கால்நடை கிளை நிலையங்கள் அமைக்கப்பட்டு, 1,085 கிளை நிலையங்கள் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டு, 20 புதிய கால்நடை மருந்தகங்கள் அமைக்கப்பட்டு, 10 கால்நடை மருந்தகங்கள் கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, 6 பெரு மருத்துவமனைகள் மற்றும் 2 கால்நடை மருத்துவமனைகள் கால்நடை பன்முக மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 2020–21 ஆம் ஆண்டில், தேனி, தலைவாசல் மற்றும் உடுமலைப்பேட்டையில் மூன்று புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. 2011–12ஆம் ஆண்டிலிருந்து, கால்நடை நிலையங்களுக்காக 647.87 கோடி ரூபாய் மதிப்பில் 2,139 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. 108 அவசர ஊர்தி வசதியைப் போன்று ஊரக கால்நடை பராமரிப்பிற்காக, கால்நடைகளுக்கான நடமாடும் அம்மா அவசர ஊர்தி சேவை நிறுவப்பட்டுள்ளது.

கால்நடை பூங்கா

சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசலில், 1,020 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,102 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது. விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் பயன் பெறும் வகையில், அதிநவீன கால்நடை உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான வாய்ப்புகள் ஆகியவை இந்த நிலையத்தில் காட்சிப்படுத்தப்படும்.

2020–21ஆம் ஆண்டு திருத்த மதிப்பீடுகளில், இந்நிறுவனத்தை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு 634.87 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பால் கொள்முதல் சாதனை

ஆவின் நிறுவனம் தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 36.79 இலட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து வருகிறது.

ஆவின் வரலாற்றிலேயே, 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் தேதியன்று, அதிகபட்சமான அளவாக, நாளொன்றுக்கு 40.63 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ஆவின் மற்றும் மாவட்ட ஒன்றியங்களால் நாளொன்றுக்கு சராசரியாக 24.49 இலட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. தேவைக்கும் அதிகமாக உள்ள பாலை அதிவெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட பால், நெய் மற்றும் வெண்ணெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றப்பட்டு வருகிறது. அதனை, சிங்கப்பூர், ஹாங்காங், கத்தார் மற்றும் இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது.

ஆழ்கடல் மீன்பிடிப்பு, உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பினை உருவாக்குதல், தகவல் தொடர்பு அமைப்புகள், மீன் பதப்படுத்தும் வசதிகள் மற்றும் நிலைக்கத்தக்க மீன்பிடிப்பு நடைமுறைகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக, இந்த அரசால் மேற்கொள்ளப்பட்ட அயராத முயற்சிகள் பெரிய அளவில் பாராட்டப்பட்டுள்ளன.

2,000 இழுவலை மீன்பிடி படகுகளை மாற்றுவதற்கான சிறப்புத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 500 ஆழ்கடல் தூண்டில் கொண்ட சூரை மீன்பிடி படகுகளின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 42 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் கட்டப்பட்டு, தற்போது செயல்பாட்டில் உள்ளன. கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம், தமிழ்நாடு கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம், மீனவர்களுக்கான மீன்பிடிப்பு குறைவுகால சிறப்பு நிதி உதவித் திட்டம் மற்றும் மீன்பிடி தடைக்கால நிவாரணத்திட்டம் உள்ளிட்ட, மீனவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களின் கீழ், 2020–21 ஆம் ஆண்டில் மொத்த நிவாரண நிதியுதவியாக 301.31 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

43 புதிய மீன்பிடி துறைமுகங்கள்

மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கும் தளங்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு கணிசமான அளவில் மேம்படுத்தப்பட்டது. 2011–12ஆம் ஆண்டு முதல் இத்தகைய மூலதன பணிகளுக்காக, மொத்தம் 1,731.82 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 43 புதிய மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கும் தளங்கள் மற்றும் உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக, 1,374.64 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

2021–22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மீன்வளத் துறைக்கான மூலதனச் செலவினங்கள் 580.97 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Read Entire Article