ஏன் இந்த 3 கொரோனா வேரியன்ட்கள் மட்டும் ஆபத்தானவையாக இருக்கின்றன? - விளக்கும் மருத்துவர்

1 week ago 2

வேரியன்ட்ஸ் என்றால் என்ன?

வுகான் மாநகரில் 2019-ம் ஆண்டு இறுதியில் உருவெடுத்த நாவல் கொரோனா வைரஸ், நாளடைவில் எட்டுத்திக்கும் பரவியது. இவ்வாறு ஒரு வைரஸ் பல கோடி மக்களுக்குப் பரவும்போது அதன் மரபணுக்கூறுகளில் சிறிது சிறிதாக அங்க மாற்றங்கள் நிகழும். இந்த அங்க மாற்றங்களை `Mutations' என்போம். இது வைரஸின் வாழ்க்கை சுழற்சியில் இயற்கையானது.

இத்தகைய அங்க மாற்றங்கள் மரபணுவின் ஒரே இடத்தில் மிக அதிகமாகத் தொடர்ந்து நிகழும்போது, பின்வரும் தலைமுறை வைரஸ் அதன் மூதாதயரைவிட சில உருமாற்றங்களை அடையும். இதைத்தான் Variants என்போம்.

அந்த Variants தங்களின் மூதாதையர்களின் குணநலன்களில் ஒத்தும்போகலாம், மாறுபட்டும் பிறக்கலாம்.

COVID-19 patient

எப்படி ஒரு பேரன் 100% தன் தாத்தாபோலவே பிரதியாக இல்லாமல், புதிய குணநலன்களுடன், அதே நேரம் தன் தாத்தாவின் உருவ ஒற்றுமையையும் வெளிப்படுத்துவானோ... அப்படித்தான் வேரியன்ட்ஸும் தன் மூதாதையருடன் வேற்றுமை மற்றும் ஒற்றுமைகளைக் கொண்டிருக்கும்.

கொரோனா வைரஸைப் பொறுத்தவரை மரபணுவின் எந்த இடங்களில் அதிக மாற்றங்கள் உருவாகின்றன?

ஒரு சுவாசப்பாதை வைரஸ் பல கோடி மக்களைச் சென்றடைய ஏதுவாக இருப்பது, அது சுவாசப்பாதையில் உள்ள செல்களில் எவ்வாறு பற்றுதலை ஏற்படுத்திக் கொள்கிறது என்பதை பொறுத்தே அமைகின்றது. இதை Spike Protein - Receptor Binding Domain என்கிறோம். கொரோனா வைரஸ் மரபணுக்கூறில் N501Y என்ற இடம் இந்த ஸ்பைக் புரதம் எவ்வாறு சுவாசப்பாதையுடன் இணையும் என்பதைத் தீர்மானிக்கிறது.

அதாவது கொரோனா வைரஸின் உடலைச் சுற்றி ஸ்பைக் புரதங்கள் உள்ளன. இந்த ஸ்பைக் புரதங்கள்தான் நமது உடலில் உள்ள சுவாசப்பாதையில் உள்ள ACE ரிசப்டார்களில் வந்து இணையும். இந்த இணைப்பு சாத்தியமானால்தான் அந்த வைரஸால் உடலுக்குள் செல்ல முடியும்.

இந்த இடத்தில் நிகழும் மாற்றங்கள் ஒரு வைரஸை முன்பைவிட வேகமாக சுவாசப்பாதை செல்களுடன் ஒற்ற வைக்கும். இதனால் முன்பைவிட, மாற்றம் அடைந்த வேரியன்ட்கள் வேகமாகப் பரவும் தன்மை கொண்டவையாக இருக்கும். நம்மை கவலை கொள்ளச் செய்யும் விதமாக N501Y என்ற இடத்தில் அதிக அங்க மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

மேலும் அங்க மாற்றம் நிகழும் மற்றொரு மரபணுப்பகுதி - E484K.

corona virus

இப்பகுதி கொரோனா வைரஸ் உடலுக்குள் நுழையும்போது நமது உடலின் எதிர்ப்பு சக்தியைத் தூண்டவிடாமல் தப்பிச்செல்ல உதவுகின்றது (Immune Escape). மேலும், ஸ்பைக் புரதத்தை இன்னும் வேகமாக சுவாசப்பாதை செல்களுடன் ஒட்டச்செய்கிறது.

இதுவரை இதுபோன்ற எத்தனை வேரியன்ட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன?

இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட வேரியன்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆயினும், மூன்று முக்கிய உருமாற்றங்களே எச்சரிக்கை விடுக்கும் தன்மையுடன் இருக்கின்றன.

1. கென்ட் வேரியன்ட்

2. தென் ஆப்பிரிக்க வேரியன்ட்

3. பிரேசில் வேரியன்ட்

1️. கென்ட் வேரியன்ட்

இந்த வேரியன்ட் முதன்முதலில் ஐக்கிய பிரிட்டன் முடியரசில் 2020-ன் பின்பகுதியில் கண்டறியப்பட்டது. N501Y எனும் ஸ்பைக் புரதத்தின் தன்மையை மாற்றியமைக்கும் இடத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் தோன்றிய வேரியன்ட் இது. இன்று வரை சுமார் 31 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இது முந்தைய கொரோனா வைரஸைவிட 30% - 80% வரை வேகமாகப் பரவும் தன்மை கொண்டது எனவும், பிரிட்டனில் செய்யப்பட்ட ஆய்வில் 30%-70% அதிக மடங்கு மரணங்களை ஏற்படுத்த வல்லது என்றும் முடிவுகள் வெளிவந்துள்ளன.

இந்த வேரியன்ட் இளம் பெண்களிடத்திலும் குழந்தைகளிடத்திலும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளில் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் இந்த வேரியன்ட்டுக்கு எதிராகவும் திறனுடனும் செயல்படுவது தெரிய வந்துள்ளது. நோவாவேக்ஸ் தடுப்பூசி இந்த வேரியன்ட்டுக்கு எதிராக 89% செயல்படுகிறது.

COVID-19 patient

2. தென் ஆப்பிரிக்கா வேரியன்ட்

இந்த வேரியன்ட் 2020 அக்டோபர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டது. இந்த வேரியன்ட்டில் N501Y இடத்தில் மாற்றம் ஏற்படுகின்றது. கூடவே E484K எனும் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஊடுருவி தப்பிக்கும் இடத்தில் மாற்றம் நிகழ்ந்து இந்த வேரியன்ட் உருவாகியுள்ளது. முந்தைய கொரோனா வைரஸைவிட வேகமாகப் பரவும் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால், மரண விகிதங்கள் குறித்த ஆய்வு இன்னும் செய்யப்படவில்லை.

இந்த வேரியன்ட் பரவும் தென் ஆப்பிரிக்காவில் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி 22% மட்டுமே நோய் தடுக்கும் திறனை வெளிப்படுத்தியது.

ஏனைய உலக நாடுகளில் 70% செயல்திறன் கொண்டிருந்த ஊசி இந்த வேரியன்ட்டைக் கட்டுப்படுத்துவதில் சுணக்கம் காட்டுவதில் இருந்து, இந்த வேரியன்ட்டின் முக்கியத்துவம் மற்றும் ஆபத்தை உணர முடியும்.

ஜான்சன் தடுப்பூசியை அமெரிக்காவில் சோதனை செய்ததில் 72% தடுக்கும் திறன், லத்தீன் அமெரிக்க நாடுகளில் சோதனை செய்ததில் 66% தடுக்கும் திறன் இருந்தது. ஆனால், இந்த வேரியன்ட் பரவி இருக்கும் தென் ஆப்பிரிக்காவில் 57% ஆக தடுப்புத் திறன் குறைந்தது.

நோவாவேக்ஸ் எனும் தடுப்பூசி பிரிட்டனில் 89% தடுக்கும் திறனை கொண்டிருக்க, தென் ஆப்பிரிக்காவில் 60% ஆக நோய் தடுக்கும் திறன் குறைந்துள்ளது.

Covid-19

Also Read: `முதல் டோஸ் தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்?!' - மருத்துவ விளக்கம்

3. பிரேசில் வேரியன்ட்

பிரேசிலின் அமேசோனாஸ் மாகாணத்தில் ஜனவரி 2021-ல் அடையாளம் காணப்பட்ட வேரியன்ட் இது. அங்கு இரண்டாம் அலை ஆரம்பிப்பதற்குக் காரணமாக இந்த P.1 வேரியன்ட் இருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அமேசோனாஸ் மாகாணத்தின் முக்கியமான நகரான மனவுஸில் முதல் அலை மூலம் 70%-75% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டிருந்தும் மீண்டும் இரண்டாம் அலை அடித்து துவம்சம் செய்கிறது.

கடந்த மே 2020-ல் 300+ மரணங்கள் நிகழ்ந்ததே முதல் அலையில் அதிகபட்சமாக மரணம் பதிவு செய்யப்பட்ட மாதமாக இருந்தது. ஆனால், இரண்டாவது அலையில் 2021 ஜனவரியில் முதல் மூன்று வாரங்களில் மட்டுமே 1300+ மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மூன்று மடங்கு மரணங்களுக்கு இந்த வேரியன்ட் காரணமாகக் கூறப்படுகின்றது.

இந்தியாவில் வேரியன்ட்டுகள்..?

மேற்சொன்ன வேரியன்ட்டுகளில் இந்தியாவில் இதுவரை மரபணுக்கூறு ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்ட 5,898 கொரோனா மரபணு மாதிரிகளில் சிலவற்றில் பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்க வேரியன்ட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவையன்றி இந்தியாவில் N440K எனும் புதிய வேரியன்ட் தென் மாநிலங்களில் பரவிக்கொண்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது

இந்த வகை உருமாற்றம் இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் காணப்பட்டது. தற்போது மகாராஷ்டிரா, கேரளாவில் ஏற்படும் இரண்டாம் அலைக்கு இந்த உருமாற்றம் அடைந்த வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வேரியன்ட் குறித்தும் இதன் ஆபத்து மற்றும் வீரியம் குறித்தும் இன்னும் அதிகம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸின் தலைமை மருத்துவரும் இந்தியாவின் கோவிட் நோய்க்கு எதிரான திட்டங்களைத் தீட்டும் வல்லுநர்கள் குழுவில் அங்கம் வகிக்கும் முக்கிய உறுப்பினருமான டாக்டர் ரந்தீப் குலேரியா, ``இந்தியாவில் பரவி வரும் வேரியன்ட்டுகள் எளிதில் பரவும் தன்மையுடன் ஆபத்தானவையாக இருக்கின்றன" என்று எச்சரிக்கை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Pfizer/BioNTech vaccine

இரண்டாவது அலையின் தொடக்கத்தில் இருக்கிறதா இந்தியா?

இந்தியாவில் கடந்த 2020 செப்டம்பர், கொரோனா பரவல் உச்சத்தை சந்தித்தது. அதற்குப் பிறகு, இறங்கு முகம் கண்டு வந்த தொற்று எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் ஒரு வாரம் சிறு ஏற்றம் கண்டு அதற்குப் பின்பு தொடர்ந்து இறங்கி வந்தது. எனினும், கடந்த ஒரு வாரமாக கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தொற்றின் எண்ணிக்கை ஏற்றத்தைச் சந்தித்து மொத்த இந்தியாவின் எண்ணிக்கைக் கணக்கிலும் ஏறுமுகத்தைக் காண வித்திட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் விதர்பா பகுதி என்றழைக்கப்படும் அமராவதி, யவட்மால் ஆகிய மாவட்டங்களிலும், மும்பை பெருநகரப் பகுதியிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மும்பையில் ஐந்து கொரோனா நோயாளிகளுக்கு மேல் கண்டறியப்படும் குடியிருப்புகளுக்கு சீல் வைக்கப்படுகின்றது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமராவதியில்,மார்ச் 1 காலை 8 மணி வரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உருமாற்றங்கள்... கவனம்...

1. இத்தகைய உருமாற்றங்கள் இரண்டாவது அலை ஏற்படுவதில் பங்கெடுக்கலாம்.

2. தற்போதைய தடுப்பூசிகள் மூலம் கிடைக்கும் எதிர்ப்பு சக்தியையும், ஏற்கெனவே தொற்றின் மூலம் அடைந்த எதிர்ப்பு சக்தியையும் ஊடுருவி மீண்டும் தொற்றை ஏற்படுத்தும் தன்மையுடன் மாறலாம்.

3. எனினும், தடுப்பூசி மூலம் கிடைக்கும் எதிர்ப்பு சக்தி நம்மை தீவிர கோவிட் நோயில் இருந்தும் மரணங்களில் இருந்தும் காக்கக்கூடும்.

4. முதல் தொற்று அலையின் மூலம் நாம் அடைந்த எதிர்ப்பாற்றல் காலப்போக்கில் குறைவதாலும் இது போன்று கொள்ளை நோய் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

COVID-19

Also Read: `உலகப்போர் மரணங்களை விட, அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் அதிகம்!’ - ஜோ பைடன் உருக்கம்

இத்தகைய வேரியன்ட்டுகள் பரவாமல் எப்படி தடுப்பது?

1. முகக்கவசம் அணிவோம்.

2. தனிமனித இடைவெளியைப் பேணுவோம்.

3. முதியோர்களைக் காப்போம்.

4. அவசியமற்ற பயணங்களைத் தவிர்ப்போம்.

5. கைகளை சோப் போட்டு கழுவுவோம்.

6. தற்போது கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசிகளை விரைவாகப் போட்டுக்கொள்வதன் மூலம் வைரஸ் பரவலை இயன்றவரை தடுப்போம்.

அதிகமாகப் பரவவிட்டால் அதிகமான உருமாற்றங்களை அடைந்து நமக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் தரும் ஆற்றல் கொரோனா வைரஸுக்கு உண்டு என்பதைப் பதிவு செய்கிறேன். சமூகப் பொறுப்புடன் செயல்படுவோம். தொற்றுப் பரவலையும் வேரியன்ட்டுகள் உருவாவதையும் தடுப்போம்.

Read Entire Article