அரசு, தனியார் பணியிடங்களில் 11ந்தேதி முதல் தடுப்பூசி போடப்படும்: மத்திய அரசு தகவல்

6 days ago 2

புதுடெல்லி, ஏப்.8-

அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் வருகிற 11ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா தடு்ப்பூசி போடும் பணிகள் நடபெற்று வருகின்றன. முதலில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வந்த தடுப்பூசி, பின்னர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் போடப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3ஆம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை வேகமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகி வருவதுடன் 500க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்.

இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வரும் மத்திய, மாநில அரசுகள், மறுபுறம் தடுப்பூசி போடும் பணிகளையும் வேகப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 11ந்தேதி முதல் பணியிடங்களிலேயே 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பொருளாதாரத்தின் அமைப்பு சார்ந்த துறைகளிலும் வழக்கமான பணி அலுவலகங்கள் (அரசு மற்றும் தனியார்), உற்பத்தி மற்றும் சேவை துறைகளிலும் கணிசமான விகிதத்தில் 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பணியாற்றுகின்றனர்.

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையம் அமைத்து ஏப்ரல் 11ந்தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

100 சதவீத பயனாளர்கள் மற்றும் விருப்பமுடையவர்கள் கொண்ட இத்தகைய பணித்தளங்களைத் தடுப்பூசி மையங்களுடன் இணைக்க வேண்டும்.

இதற்காக அரசு மற்றும் தனியார் துறை தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி இந்தப் பணித்தள தடுப்பூசி திட்டப் பணிகளை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read Entire Article